×

பொதக்குடி பள்ளி வளாகத்தில் சிதிலமடைந்ததை இடித்து விட்டு புதிய மேல்நிலை நீர் தேக்க தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர கோரிக்கை

நீடாமங்கலம், மார்ச் 31: நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி தெற்கு பள்ளி வளாகத்தில் ஆபத்தாக இடிந்து விழும் நிலையில் உள்ள குடி நீர் மேல் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் பொதக்குடி தெற்கு அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் ஒரு லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல் தேக்க தொட்டி உள்ளது. இந்த மேல்நிலை நீர் தேக்க தொட்டி கடந்த 8 ஆண்டுகளுக்கு மேலாக மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் உள்ளது. வெடிப்பு ஏற்ப்பட்டு தண்ணீர் கசிந்து கொண்டுள்ளது. தூண்கள் மற்றும் தொட்டியின் அடிப்பகுதியில் சிமெண்ட் காரைகள் விழுந்து கம்பிகள் தெரிகிறது. இந்த மேல்தேக்க குடிநீர் தொட்டி மிகவும் பழுதடைந்து எப்பொழுது கீழே விழும் என்ற ஆபத்தான நிலை உள்ளது. இந்த இடத்தின் கீழ்தான் ஆபத்து தெரியாமல் பள்ளியின் மாணவ,மாணவிகள் விளையாடி வருகின்றனர்.

பெரிய விபத்து ஏற்படும் முன் மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தி அருகிலேயே ரூ.17.63 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட புதிய குடிநீர் மேல் தேக்க தொட்டியை செயல்பாட்டில் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கூறினர். இது தொடர்பாக பொதக்குடி ஊராட்சி தலைவர் மல்லிகா பிச்சையன் கூறுகையில், தற்போது கோடை காலம் மற்றும் நோன்பு நேரம் என்பதால் மக்களுக்கு குடி நீர் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். நோன்பு காலம் முடிந்த உடன் பழுதடைந்துள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டியை இடித்து விட்டு புதிதாக கட்டப்பட்டிருக்கும் குடிநீர் மேல் தேக்க தொட்டி செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

Tags : Pothakudi ,
× RELATED நீடாமங்கலம் அருகே மின்னொளியில் மின்னிய சந்தனக்கூடு ஊர்வலம்